Skip to main content

இன்று சமூக ஊடகங்களில் எழுதும் நிறைய பேர், புத்தகங்களையோ கட்டுரைகளையோ ஆழ்ந்து படிக்காமலும் புரிந்துகொள்ளாமலும் செயற்கை நுண்ணறிவு தளங்களை பயன்படுத்தி, அது உருவாக்கிய கருத்துக்களை, தமது கருத்துக்களாகவும் கட்டுரைகளாகவும் பதிவிடுகின்றனர்.

இதில் பல சிக்கல்கள் இருக்கிறது.
1. நாம் அந்த புத்தகத்தையோ கட்டுரையையோ படிக்கவே இல்லை என்பது அல்லது நுனிப்புல் மேய்ந்தது.

2. படிக்காததை படித்தது போல் எழுதியது.

3.செயற்கை நுண்ணறிவியல் சார்புத்தன்மை (algorithmic bias) / மயங்கும் தன்மை (Hallucination) உடையது என்பதை நாம் உணராமல் அல்லது அதை கண்டுகொள்ளாமல் இருப்பது.

4.நாம் செயற்கை நுண்ணறிவை சார்ந்தே வாழ்வதால், சுய சிந்தனை என்பதை காலப்போக்கில் இழந்து விடக்கூடிய அபாயம் இருப்பதை உணராமல் இருப்பது. 

திருவள்ளுவர் இதை முன்பே கணித்திருப்பார் போலும்.

கல்லாது மேற்கொண்டு ஒழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும் – 845

ஒருவன் கற்காத புத்தகங்களை கற்றறிந்து போல் நடந்து கொள்வானேயாயின், மக்கள் அவன் கற்ற நூல்களையும் கற்க வில்லையோ என்று  சந்தேகப்படுவர்.

செயற்கை நுண்ணறிவு மனித வரலாற்றின் ஒரு மிகப்பெரிய கண்டுப்பிடிப்பு. அதை நாம் அவசியம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால், நாம் அதற்கு அடியாகிவிடக்கூடாது.

செயற்கை நுண்ணறிவின் சார்புத்தன்மைக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

இந்த கட்டுரையை எழுதும் போது , திருவள்ளுவர் மடியில் ஒரு மடிக்கணினி இருப்பது போலவும், அதில் AI என்ற எழுத்துக்கள் இருப்பது போலவும் ஒரு படம் தேவைப்பட்டது. 

இதற்கு நான் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினேன்.

ஆனால் அது எனக்கு வரைந்து கொடுத்த படத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட மதத்துக்குரிய அடையாளங்களுடன் இருந்தார்.

திருவள்ளுவர் எங்கும் தான் இன்ன மதம் என்றோ, இந்த குழுவை சேர்ந்தவர் என்றோ எங்கும் அடையாளப்படுத்திக்க கொண்டதில்லை. அதனால் தான் அவரின் திருக்குறள் ‘உலகப் பொது மறை’ என்று அழைக்கப்படுகிறது.

தமிழ் நாடு அரசின் திருவள்ளுவர் படத்தில் கூட எந்த மத அடையாளமோ மற்ற குறியீடுகளோ இருக்காது.

திருவள்ளுவர் படத்தை அடையாளமின்றி மாற்ற நான் எவ்வளவோ முயன்றேன். Prompt களை மாற்றினேன். ChatGPT, Gemini, Midjourney, Dall E, Canva  என்று பல நுண்ணறிவு தளங்களில் முயற்சி செய்தேன். ஆனால் அவை எல்லாம் எனக்கு ஒரே மாதிரியான படங்களையே கொடுத்தன. 

இது திருவள்ளுவருக்கும் , அவரது படைப்புக்கும், தத்துவத்திற்கும் கணினி வழிமுறை (அல்கோரிதம்) செய்த அநீதி என்றே சொல்லலாம்.

கீழே, உங்கள் ஒப்பீட்டிற்கு திருவள்ளுவரின் பல்வேறு படங்களை வழங்கியுள்ளேன்.

சார்பற்ற திருவள்ளுவர் படம்.


Thiruvalluvar


செயற்கை நுண்ணறிவு வரைந்த படம். (பல செயற்கை நுண்ணறிவு தளங்கள் இது போன்ற படத்தையே கொடுத்தன)

AI Thiruvalluvar

நான் சீர் செய்த திருவள்ளுவர் படம். கீழே உள்ள படத்திலும் எனக்கு திருப்தி இல்லை.

Thiruvalluvar

இதைத்தான் ‘Algorithmic bias’ என்கிறார்கள். அதாவது செயற்கை நுண்ணறிவு ஒரு சார்பாக செயல்படுவது.

இதனால் தான் நாம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தினாலும், அது கொடுக்கும் பதில்களையும், பதிவுகளையும் உன்னிப்பாக கவனித்து சரி செய்ய வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு கொடுப்பதை சுய சிந்தனை செய்யாமல் ஏற்றுக்கொள்ளக் கூடாது.

Leave a Reply