Skip to main content

சமீபத்தில் கவிதை தொகுப்பொன்று புரட்டிக்கொண்டிருக்கையில் ‘நீ மணி , நான் ஒலி’ என்ற இந்த கண்ணதாசன் கவிதை கண்ணில்பட்டது.

இது அனுபவத்தின் மூலம் வாழ்க்கையை கண்டறியும் அழகிய தத்துவக் கவிதை ஆகும்.

மறைந்த திரு. நெல்லை கண்ணன் அவர்கள் இந்த கவிதையை, கண்ணதாசன் பற்றிய கூட்டமொன்றில் கூறியதை காணொளியில் கேட்டிருக்கிறேன்.

மீண்டும் அதை படிக்கும் போது, powerful ஆக தோன்றியது. இறுதி வரிகள் ஒரு வியத்தகு உணர்தலை வழங்கியது.

யான் பெற்ற இன்பம் , இந்த வையகமும் பெற, இதை பகிர்கிறேன்.

On a side note: என் தந்தை திரு. கயல் தினகரன் அவர்களை காரைக்குடியில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தது கவிஞர் கண்ணதாசன் அவர்கள். அவருடைய ‘தென்றல்‘ பத்திரிக்கையிலே தான் அவர் முதன்முதலில் பணியாற்றினார். இதோ அந்த கவிதை – ‘நீ மணி , நான் ஒலி’

‘நீ மணி , நான் ஒலி’

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! 

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! 

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! 

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! 

முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! 

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்! 

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி ‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

Leave a Reply