Skip to main content

மூன்று வாரங்களுக்கு முன்பு, புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்கள்  திரு. பி.சி. ஸ்ரீராம் மற்றும் அவரது உதவியாளர் திரு. மகேஷ் முத்துசாமி ஆகியோர் நடத்திய இரண்டு நாள் ஒளிப்பதிவு (Cinematography) பட்டறையில் (workshop) கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. Pure Cinema நடத்திய பட்டறை இது. அவர்களுக்கு நன்றி.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், திரு. பி.சி. ஸ்ரீராமைப் பார்ப்பதற்காகவும், அவர் பேசுவதைக் கேட்பதற்காகவும்தான் நான் அந்தப் பட்டறைக்குச் சென்றேன். ஒளியை பற்றியும், அதை திரைப்படங்களில் கையாளும் முறையை பற்றியும் சிந்தனையைத் தூண்டும் வகையில் பல கருத்துக்களை கூறுவார் என்று நோக்கில் தான் இந்த பட்டறைக்கு சென்றேன். கேமராவை கையாளும் தொழில் நுட்பங்கள் பற்றியோ , மற்ற ஒளி சம்பந்தப்பட்ட கருவிகள் கையாள்வதை பற்றியோ கற்றுக்கொள்ளும் நோக்கம் பெரிதாய் இல்லை.

அந்தப் பட்டறை வளர்ந்து வரும் திரைப்பட ஆர்வலர்களுக்காக நடத்தப்பட்டது. 

நான் திறன் பேசியில் (smart phone) ‘பார்த்து கிளிக் செய்யும்’ முறையை மட்டுமே அறிந்தவன். அதற்கும் மேல் உள்ள நுட்பமெல்லாம் தெரியாது. 

ஆனால், பட்டறையில் இருந்து வெளியே வரும்போது, ஒளியை முற்றிலும் புதிய கண்ணோட்டத்தில் பார்த்தேன்.

பி.சி. ஸ்ரீராமைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

பி.சி. ஸ்ரீராம்

பி.சி. ஸ்ரீராம் – ஒளியின் மாணவன்

ஒளியை பார்க்க கற்றுக் கொள்ளுதல்

முதல் நாள் முழுவதும் ஒளி மற்றும் ஒளியின் உபகரணங்கள் (lighting equipments) பற்றிய கோட்பாடுகள்தான். ஆனால் சலிப்பாகத் தெரியவில்லை. 

திரு. பி.சி. ஸ்ரீராம் அவர்களுடனான கேள்வி பதில் அமர்வுடன் தொடங்கியது. ஆடம்பரமான பேச்சுக்கள் இல்லை, சுற்றி வளைக்காத நேரடியான பதில்கள் மட்டுமே.  சில கேள்விகளுக்கு திரு. மகேஷ் முத்துசாமி அவர்களும் பதிலளித்தார்கள் 

ஒளி எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதை எவ்வாறு கையாள்வது என்பதை திரு. பி.சி. ஸ்ரீராம் அழகாக விளக்கினார். 

அவர் தனது திரைப்படங்களிலிருந்து உதாரணங்களை வழங்கினார். உதாரணமாக, ‘குருதிப்புனல்’ படத்தில் நக்ஸலைட்டுக்கு இதமான வெப்பத்தை (warm lighting) அளித்ததைப் பற்றி விளக்கினார். 

எனது புரிதலின்படி, வெப்பமான ஒளி என்பது படத்தில் உள்ள எதிர்மறை கதாபாத்திரத்துடன் அவர் அனுதாபம் கொள்கிறார் என்று அர்த்தம். 

“ஒளியுடன் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதைப் பொறுத்தே எல்லாம் இருக்கிறது,” என்று திரு. பி.சி. ஸ்ரீராம் கூறினார். 

ஒளி என்பது வெறும் ஒளி மட்டுமல்ல, அது உணர்ச்சியும் கதை சொல்லலும் கூட.

பின்னர், ஒளியின்  அடிப்படைகளுக்குள் சென்றோம் – ஒளி (light), அமைப்பு (composition), லென்ஸ்கள் (lenses), இயக்கம் (movement) மற்றும் ஆன்-செட் LUT  (On -set LUTs) கள். இது ஒளிப்பதிவின் வெவ்வேறு பரிணாமங்களை எனக்கு அறிமுகப்படுத்தியது.

ஒளியை வசப்படுத்தும் கலை

இரண்டாம் நாள் முழுக்க நேரடி கற்றல்  (on—hands session) விளக்குகளை அமைப்பது, ரிக்ஸ் (Rigs) பயன்படுத்துவது மற்றும் ரிஃப்ளெக்டர்கள் (reflectors) ஆகியவற்றின் செய்முறை விளக்கம்.

லைட் பாய்ஸ் (light Boys) இணைந்து செயல்படுவதையும், எல்லாவற்றையும் குறிப்பறிந்து அமைப்பதையும் பார்த்தேன். அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று அதுவரை எனக்குத் தெரியாது. இப்போது தெரிகிறது.

பட்டறையின் போது, திரு. மகேஷ் முத்துசாமி ஒரு கேள்வியை எழுப்பினார்:

“நீங்கள் படப்பிடிப்பு இடத்திற்கு வந்தவுடன் முதலில் எதைச் சரிபார்க்க வேண்டும்?”

விளக்குகள் (lighting), பிரேமிங் (Framing), கேமரா கோணங்கள் (Camera Angles), இயற்கை ஒளி நிலைகள் (Natural Lighting) என்று பதில்கள் விரைவாக வந்தன. ஆனால் திரு. மகேஷ் முத்துசாமி ‘இல்லை என்பது போல்’ தலையை அசைத்தார்.

“நீங்கள் முதலில் சரிபார்க்க வேண்டியது, மின் உற்பத்தி கருவி (generator) வண்டி தெருவில் நுழைய முடியுமா என்பதுதான்.” என்று அவர் கூறினார்.

நீங்கள் ஒரு ஷாட்டை எவ்வளவு நன்றாக திட்டமிட்டாலும், விளக்குகளுக்கு மின்சாரம் வழங்க முடியாவிட்டால், எதுவும் பயனில்லை. ஒளிப்பதிவு என்பது வெறும் படைப்பாற்றல் (creativity) மட்டுமல்ல; அது தளவாடங்கள் (logistics) பற்றியதும் கூட. திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் பயன்படுத்தும் அதிக திறன் கொண்ட விளக்குகளுக்கு அதிக மின்சாரம் தேவை, மேலும் மின் உற்பத்தி கருவி (Generator) வண்டி படப்பிடிப்பு தளத்திற்கு வர முடியாவிட்டால், முழு படப்பிடிப்பும் சிக்கலில் முடியும்.

எவ்வளவுதான் கோட்பாடுகள் (theory) படித்திருந்தாலும் அனுபவங்கள் (experience) கற்றுக்கொடுக்கும் பாடங்கள் முக்கியமானவை. அனுபவங்கள் தரும் பாடங்கள் அடிப்டையானதாகவும் இருக்கும், ஆழமாகவும் பதியும்.

எனக்கு எல்லாம் புரிந்ததாக நான் பாசாங்கு செய்ய மாட்டேன். 10% புரிந்திருக்கலாம்.

மீதமுள்ளவை? அது என் தலைக்கு மேலே போனது. ஆனால் அது பரவாயில்லை. நான் ஒரு வெற்று காகிதம் (empty paper) போல வந்தேன். நான் கற்றுக்கொண்ட ஒவ்வொரு சிறிய விஷயமும் எனக்கு ஒரு பெரிய படிப்பினை தான்.

ஒளிப்பதிவு என்பது கூர்ந்து கவனிக்கக் கற்றுக்கொள்வது (observation) என்பதை உணர்ந்து நான் வெளியே வந்தேன்.

கற்றுக் கொண்ட பாடங்கள்

திரு. பி.சி. ஸ்ரீராம் கலந்துரையாடல் பகுதியில் இருந்து சில குறிப்புகள்

  • மனிதக் கண் மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லையற்ற தன்மை உடையது . ஒரு கேமரா, குறிப்பாக மொபைல், அந்தப் பார்வையை கட்டுப்படுத்துகிறது. கருவிகள் உங்கள் கற்பனையை கட்டுப்படுத்தக் கூடாது.
  • ஒரு ஒளிப்பதிவாளரின் மிகப்பெரிய திறன் கேமராவைக் கையாளுவது அல்ல, அது சொல்வன்மை தான். (Communication)
  • ஒரு திரைக்கதையைப் படிக்கும்போது ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு வர வேண்டும். 
  • ஒவ்வொரு கதைக்கும் அதன் தனித்துவமான ஒளி (unique light) உள்ளது. அதை கண்டுபிடிப்பது ஒளிப்பதிவாளரின் பொறுப்பு. 
  • ஒளி என்பது வெறும் தெரிவுநிலை (visibility) மட்டுமல்ல, அது மனநிலை (mood), அமைப்பு (texture) மற்றும் கதை சொல்லல் (story telling) பற்றியது. 
  • இருண்ட அறை ஒரு கேன்வாஸ் (canvas). வெவ்வேறு ஒளி நிறங்கள் வெவ்வேறு தூரிகைகள் (paint brushes). 
  • ஒளிப்பதிவு என்பது ஒரு கூட்டு முயற்சி , ஒரு கலந்துரையாடல்.

இன்னும் சில பாடங்கள்

  • திரு. பி.சி. ஸ்ரீராம் மற்றும் அவரது உதவியாளர் திரு. மகேஷ் முத்துசாமி அவர்கள் சாந்தமாகவும் பொறுமையாகவும் பதில் கூறினர். சாதித்து விட்டேன் என்ற செருக்கு இல்லை. 
  • எந்த கேள்வியும் முட்டாள்தனமாக கருதப்படவில்லை. 
  • திரைப்பட ஆர்வலர்கள் வாசகர்களாக (readers) இருக்க வேண்டும். 
  • முதல் நாள் , பி.சி. ஸ்ரீராமின் உதவியாளரிடம் மொபைல் கேமராக்களுக்கான விளக்குகள் (lighting) பற்றி கேட்டேன். அவர் சுருக்கமான பதிலை அளித்திவிட்டு வேறொருவருடன் பேச ஆரம்பித்துவிட்டார். லேசான சங்கடத்துடன் அங்கிருந்து சென்றுவிட்டேன். ஆனால் அடுத்த நாள், அவர் கூட்டத்திலிருந்து என்னை கண்டுபிடித்து , அழைத்து, கவனிக்கச் சொன்னார். அடுத்த அமர்வில் என் நேற்றைய கேள்விக்கான பதில் இருப்பதாக கூறினார். பதில் இருந்தது. அவருக்கு என்னை நினைவிருந்தது மட்டுமல்லாது, கூப்பிட்டு கவனிக்க சொன்னதும் ஆச்சர்யமாக இருந்தது. மனிதர்களை டக்கென்று எடை போடக் கூடாதென்று மனதுக்குள் என் மண்டையில் கொட்டிக் கொண்டேன்.

திரு. பி.சி. ஸ்ரீராம் நான்

இது எனக்கு மனத்திருப்தி தந்த இரண்டு நாட்கள்.

திரு. மகேஷ் முத்துசாமி நான்

வெறும் 10% புரிதலோடு நான் வீட்டிற்கு திரும்பி இருக்கலாம், ஆனால் குறைந்தபட்சம் ஒரு லுமென் (Lumen) தெளிவாவது பெற்றிருப்பேன் என்று நம்புகிறேன்.

Leave a Reply